முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை... கோஹ்லி அதிரடி பேட்டி
முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அடிலெய்டு டெஸ்ட் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது,’’ என கோஹ்லி தெரிவித்தார்.
கடந்த 2014ல் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய டெஸ்ட், அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 517/7, இந்தியா 444/10 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 290/5 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. 364 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 315/10 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 48 ரன்களில் வீழ்ந்தது.
தோனி திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதால், முதன் முறையாக கோஹ்லி கேப்டனாக களமிறங்கினார். இரு இன்னிங்சிலும் சதம் (115, 141) விளாசினார். சக வீரர்களின் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.
இதுகுறித்து கோஹ்லி கூறியது:
கடந்த 2014ல் அடிலெய்டில் நடந்த டெஸ்ட், இரு அணி வீரர்களுக்கும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. இப்போட்டியை பார்த்த ரசிகர்களுக்கும் மிகச் சிறப்பானதாக அமைந்தது. ஒருவருக்கு ஒருவர் மிக நெருக்கமாக போட்டியிட்டு கொண்டாலும், இரு அணி வீரர்களும் எல்லை மீறவில்லை.
முயற்சி செய்தால் முடியாதது இல்லை, எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த டெஸ்ட் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது. துவக்கத்தில் வெற்றி இலக்கை பார்த்த போது கடினமாக தெரிந்தது. இருப்பினும் மனது வைத்தால் முடியும் என முடிவு செய்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் இலக்கைத் துரத்துவது என ஒருமனதாக முடிவு செய்தோம்.
கடைசியில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், ஏறக்குறைய வெற்றிக்கு அருகில் சென்றோம். நாங்கள் இன்று சிறந்த டெஸ்ட் அணியாக திகழ்வதற்கு இப்போட்டி முக்கிய காரணம். எங்களது பயணத்தில் அடிலெய்டு டெஸ்ட் என்றும் முக்கிய மைல்கல்லாக இருக்கும்,
இவ்வாறு அவர் கூறினார்.
பின்ச் வியப்பு
கோஹ்லி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் கூறுகையில்,‘‘இந்திய அணிக்காக விளையாடுவது, கேப்டனாக இருப்பது என இரண்டு விஷயங்களிலும் நெருக்கடி அதிகம் இருக்கும். இவற்றை கோஹ்லி நீண்ட காலமாக சிறப்பாக கையாள்கிறார். மூன்றுவித கிரிக்கெட்டிலும் சீரான ரன் குவிப்பை வெளிப்படுத்துகிறார்,’’ என்றார்.
0 Comments