இந்தியாவின் ‘சூப்பர்’ ஜோடி * ரோகித் மற்றும் தவான்..இர்பான் பதான் பாராட்டு

இந்தியாவின் ‘சூப்பர்’ ஜோடி * ரோகித் மற்றும் தவான்..இர்பான் பதான் பாராட்டு
புதுடில்லி: ‘‘இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் சிறப்பான துவக்க ஜோடியாக திகழ்கின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விளையாடுவது தான் இதற்குக் காரணம்,’’ என இர்பான் பதான் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர்களாக கடந்த 2013 முதல் ரோகித் சர்மா, ஷிகர் தவான் உள்ளனர். ஒருநாள் அரங்கில் இருவரும் இணைந்து 16 முறை தங்களது ‘பார்ட்னர்ஷிப்பில்’ சதம் அடித்துள்ளனர். அதிக சதம் அடித்த ஜோடி வரிசையில் கில்கிறிஸ்ட், ஹைடனுடன் (ஆஸி.,) இணைந்து இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின், கங்குலி (21 சதம்) உள்ளனர்.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் ‘ஆல் ரவுண்டர்’ இர்பான் பதான் கூறியது:

ஷிகர் தவான் எவ்வித தடுமாற்றமும் இன்றி துவக்கத்தில் ரன்கள் சேர்ப்பார். இவர் வேகமாக ரன்கள் சேர்ப்பதால் மறுமுனையில் ரோகித் சர்மா, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போதிய கால அவகாசம் கிடைக்கும். இதன் பின் திடீரென பேட்டிங்கில் வேகம் எடுத்து விடுவார் ரோகித். இது நாம் எல்லோருக்கும் தெரியும்.

பொதுவாக கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் எதிர் முனையில் விளையாடும் சக வீரர்களின் பலம், பலவீனம் குறித்து நன்கு தெரிந்து கொள்வது மிக அவசியம். ரோகித்துக்கு எப்போது கால அவகாசம் தேவை என்பதை ஷிகர் தவான் நன்றாக அறிந்து வைத்திருப்பார்.

இதற்கேற்ப ஒரு சில ஓவர்களை அவரே எதிர்கொள்வார். அதேபோல, சுழற்பந்து வீச்சாளர்கள் வரும் போது, ரோகித் ‘செட்டில்’ ஆகியிருப்பார். அதிக பந்துகளை ரோகித் எதிர்கொண்டு, ஷிகர் தவானுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்.இப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விளையாடுவதால் தான் இவர்கள் வெற்றிகரமான ‘சூப்பர்’ ஜோடியாக திகழ்கின்றனர். இது இந்திய அணியின் வெற்றிக்கும் தொடர்ந்து பல ஆண்டுகள் காரணமாக அமைந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments