இர்பான் பதான் எனக்கு அனுப்பிய பணத்தை திருப்பி கொடுத்து விடுவேன்!- சென்னை செருப்பு தைக்கும் தொழிலாளி

   சென்னையை சேர்ந்தவர் பாஸ்கரன். செருப்பு தைக்கும் தொழிலாளியான இவர், தீவிர கிரிக்கெட் ரசிகர். சாதாரண நாள்களில் ரூ. 500 ஐ.பி.எல் நடைபெறும் காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 1, 000 என சம்பாதித்து வந்தார். கடந்த 1993- ம் ஆண்டு முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஒவ்வொரு போட்டியையும் பாஸ்கரன் பார்த்து ரசித்துள்ளார்.


   வாலாஜா சிறிய செருப்பு தைக்கும் கடை வைத்திருக்கும் பாஸ்கரன்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஆஃபிசியல் காப்லர். ஐ.பி.எல் போட்டி நடைபெறும் நாள்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டிரெஸ்ஸிங் அறை அருகே பாஸ்கரனுக்கும் சிறிய இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கு அமர்ந்து கொண்டு பாஸ்கரன் சென்னை அணி வீரர்களின் காலணிகளில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வார். இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல் தொடர் நடைபெறவில்லை.

   லாக்டௌன் காரணமாக தொழிலிலும் ஈடுபட முடியாமல் பாஸ்கரனும் அவரின் குடும்பத்தினரும் வறுமையில் வாடியிருக்கின்றனர். ஆனால்,யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இர்பான் பதானுக்கு திடீரென்று பாஸ்கரனின் நினைவு வந்துள்ளது. 'லாக்டௌன் காரணமாக வறுமையில் வாடுவாரே ' என்ற எண்ணமும் இர்பான் பதானை வாட்டியது. உடனடியாக, ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ ரேணுக் கபூரிடத்தில் பாஸ்கரனின் செல்போன் எண்ணை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், ரேணுக் கபூரோ நம்பர் வாங்கிக் கொடுக்க மறந்து விட்டார்.


     தொடர்ந்து, வேறு யார் மூலமோ செல்போன் எண்ணை வாங்கிய இர்பான் பதான் பாஸ்கரனிடத்தில் பேசியிருக்கிறார். தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 150 மட்டுமே வருமானமாக கிடைக்கிறது என்று பாஸ்கரன் வருத்தத்துடன் இர்பான் பதானிடத்தில் கூறியிருக்கிறார். இதையடுத்து பாஸ்கரனின் வங்கிக்கணக்கில் ரூ. 25,000 பதான் செலுத்தியுள்ளார்.

   இது குறித்து பாஸ்கரன் கூறுகையில், '' இந்த காலக்கட்டத்தில் எப்படி வாழப்போகிறேன் என்ற எண்ணம் என்னிடத்தில் ஏற்பட்டது. இந்த சூழலில்தான் என்னை இர்பான் பதான் தொடர்பு கொண்டு பணம் அளித்தார். ஆனாலும், இதை நான் திருப்பி கொடுத்துவிடுவேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு தொடங்கினால் எனக்கு பழையபடி வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும் '' என்கிறார்.


   இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், கடந்த 2015- ம் ஆண்டு ஒரே ஒரு சீசனில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இர்பான் பதான் விளையாடியுள்ளார். எனினும், செருப்பு தைக்கும் தொழிலாளியை மறக்காமல் நினைவு வைத்து உதவியது பாராட்டுக்குரியதே!

Post a Comment

0 Comments